Wednesday, March 24, 2010

அருள்மிகு ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஆலயம்

அருள்மிகு ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்
திருலோக்கி,
திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
பட்டாச்சார்யார்
: வரதராஜன் 9487131630

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோக்கி எனும் தலம் காவிரி மற்றும் பழவாறு ஆகிய நதிகளின் வடபுறம் அமைந்துள்ள கிராமம். இக்கிராமத்தின் வடபுறம் ராமர் ஓடை எனும் சிற்றாறு ஓடுகிறது. முதலாம் இராஜராஜனின் பட்டத்து அரசிகளில் ஒருவரான திரைலோக்கிய மாதேவியாரின் திருப்பெயரில் திரைலோக்கிய மாதேவியார் சதுர்வேதி மங்கலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டு நாளடைவில் திருலோக்கி என மருவி அழைக்கப்படலாயிற்று.

மூன்று லோகங்களிலும் உள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் சித்புருஷர்களும், மஹரிஷிகளும், வாசம் செய்யும் புனித தலமாக இத்தலம் விளங்குகின்றது.



Click the second video for continuation.


To see Continuous on Youtube:
http://www.youtube.com/watch?v=rpnmc7gzhaA&feature=PlayList&p=1475D26D61C387FC&index=0&playnext=1


ஆலயங்களின் சிறப்பு
இத்தலத்தில் அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஆலயம், அருள்மிகு கைலாசநாதர் ஆலயம், அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம், அருள்மிகு மாரியம்மன் ஆலயம், அருள்மிகு காளியம்மன் ஆலயம், அருள்மிகு அய்யனார் ஆலயம் மற்றும் விநாயகர் ஆலயம் இத்தலத்தின் நாற்புறமும் அமையப்பெற்றுள்ளன.

திருக்கோவிலின் அமைப்பு

அந்நாளில் தேரோடிய வீதிகள் நான்கும் தழுவி நிற்க நடுநாயகமாக சிவன் கோவில்
உள்ளது. இத்திருக்கோயிலின் தென்கிழக்கே அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலின் வாயில் மொட்டை கோபுர
மாக அமைக்கப்பட்டு தற்போது ராஜகோபுரமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பல சிறப்புகள் பெற்ற ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா அழகுடையது.ராஜகோபுர வாசலில் ஆஞ்சநேயரும் வாயிலை அடுத்து மண்டபத்தில் கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகா மண்டபதில் வலதுபுறம் தென்முக விஷ்ணு துர்க்கை வீற்றிருக்கிறார். அடுத்து விஷ்வக்சேனர்,யோகநரசிம்மர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தென்புறம் பன்னிரு ஆழ்வார்கள் காட்சி தருகின்றனர் வடபுறத்தில் ஸ்ரீ வரதராஜபெருமாள் சன்னதி தென்முகம் நோக்கி உள்ளது. அர்த்தமண்டபத்தை கடந்து கர்பகிரகத்தில் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஐந்து தலை ஆதிசேஷன் மீது சயனிதிருக்கின்றார்.திருக்கோயிலின் தெற்கு பிரகாரத்தின் மேற்கு பகுதியில் ஸ்ரீ க்ஷீரநாயகி தாயார் சன்னதி உள்ளது.


மூர்த்தி

அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் தென்புறம் திருமுடியையும் வடபுறம் திருவடிகளையும் கொண்டு ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையின் மீது கிழக்கு நோக்கிய திருமுகமும் சதுர்புஜங்களும் சங்கு சக்கரதரியாக திருப்பாற்கடலில் சயனித்தவராக காட்சி தருகிறார்.

திருமுகமண்டலத்தின் அருகே ஸ்ரீ தேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் வீற்றிருக்க நாபிக்கமலத்திலிருந்து நான்முகன் எழுந்தருளி உள்ளார். இவையனைத்தும் சுதை வேலைப்பாட்டினால் ஆனவை.

சுதையானது பசுவினுடைய காலடி மண், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி போன்ற பொருள்களுடன் கோடிக்கணக்கான மூலிகைகளின் சாராம்சமும் சேர்த்து செய்யப்பட்டது. இதற்கு பன்மடங்கு சக்தியுண்டு.

அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் திருமாலுக்கு திருமஞ்சனத்திற்க்கு பதிலாக சாம்பிராணி தைலக்காப்பு விஷ்ணு பதி புண்ணிய காலங்களில் நடைபெறுகிறது
அப்போது பெருமாள் மலர் மாலைகளாலும் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்
படுகிறார்.

மேலும் இத்திருக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாக இருப்பதால் வில்வ
இலைகளால் அர்ச்சனை செய்வதும் பாற்கடலில் வீற்றிருப்பதால் பால் சம்பந்தப்பட்ட நைவேத்தியங்கள் செய்வதும் சிறப்புடையதாகும்.


தீர்த்தம்

இத்திருகோவிலின் கீழ்ப்புறம் ஆஞ்சனேயர் சன்னதிக்கு பின்னால் அழகிய லெக்ஷ்மி தீர்த்தம் எனும் புஷ்கரணி அமைந்துள்ளது. இது க்ஷீர தீர்த்தம், பாற்கடல் தீர்த்தம் என
வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.இந்த தீர்த்தத்தில் நீராடி சுகேது என்பவர் தனக்கிருந்த நீண்ட நாள் தலைவலியை போக்கிக் கொண்டார். இப் புஷ்கரணியில் திருமகளே நீராடி வில்வ மரத்தினடியில் தவமிருந்து திருமாலின் திருமார்பில் நீங்கா இடம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

ஸ்தலவிருட்சம்

மூன்று இலைகளையுடைய வில்வ தளங்கள் உலகிலேயே முதன்முதலில் தோன்றிய இடம் திருலோக்கியே என்பது புராண வரலாறு கூறும் உண்மையாகும்.
திருமகள் வில்வ மரத்தினடியில் அமர்ந்து தவம் இயற்றிய காலத்தில் இட கலை,பிங்கலை,சுழிமுனை எனும் மூன்று ஸ்வாச நாளங்கள் மூன்று வில்வ இலைகளாக அமைந்து தெய்வீக சக்தியால் வில்வ தளங்களாக மாறி பூமியில் திரிதள வில்வ மரங்களாக தோன்றின என்பது புராண வரலாறு.

க்ஷீர நாயகி தாயார் சன்னதி :

ஸ்ரீ மஹாலக்ஷ்மியே இத் திருக்கோயிலின் தென் மேற்கில் தனி சன்னதி கொண்டு க்ஷீர நாயகி தாயாராக அருள் பாலிக்கிறார்.க்ஷீர தீர்த்தத்தின் கரையில் வில்வ மரத்தினடியில் அமர்ந்து தவம்புரிந்து ஸ்ரீ நாராயண பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற மஹாலெக்ஷ்மி இவர்தான் இத்தாயாரை வழிபட்டால் கருத்து வேற்றுமையினால் பிரிந்து விட்ட தம்பதிகள் ஒன்று சேர்வதுடன் மகளிர்க்கு மாங்கல்ய பலம் பூரணமாக கிடைக்கும். பால் சம்பந்தப்பட்ட பொருள்களை படைத்து வழிபடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள்

மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் நின்றவண்ணம் காட்சி தருகிறார். அவருக்கு தனி சன்னதி உள்ளது. சதுர்புஜங்களைக் கொண்டு திகழும் வரதராஜரின் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் இடம் பெற்றுள்ள நிலையில் ஒரு கரத்தால் அபயம் அளித்து அருள் புரிகின்றார்.வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேட திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றது.

விஷ்ணு துர்க்கை

வௌவால் நந்தி மண்டபத்தின் வடபுறத்தில் தெற்கு நோக்கிய விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. இத்தலத்தில் துர்க்கை தெற்கு நோக்கி அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். பஞ்சபாண்டவர்கள் மகாபாரதப் போரில் போர் செய்யப் புறப்பட்ட போது தென்முக துர்க்கையை வழிபட்டதால்தான் வெற்றி கிட்டியது என்பது புராணம். தற்போது இங்குள்ள தென்முக விஷ்ணு துர்க்கையை வழிபட்டு செல்வோர்க்கு எல்லாம் வெற்றியே கிடைக்கும்.

கருடாழ்வார் சன்னதி

ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் சன்னதிக்கெதிரே கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு பருப்பு கொழுக்கட்டை நிவெதனம் செய்து வழிப்பட்டால் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷத்தன்மை நீங்கி சுகம் பெறுவர்.

புராண வரலாறு

த்ரயம்பகேஷ்வரர் என்னும் திரைலோக்கிய சித்தர் பூலோகம், புவர்லோகம், சுவலோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் சஞ்சாரம் செய்கின்ற ஆற்றல் படைத்தவர். அவர் கல்வி , செல்வம் , வீரம் , புகழ் ,ஆரோக்கியம் , பணம் முதலான 16 செல்வங்களும் ஒருங்கே பெற்ற தலம் எங்கே உள்ளதெனவும் முக்தி , மோட்சம் , தரக்கூடிய தலம் எங்கே உள்ளதெனவும் நிலம், நீர், நெருப்பு ,காற்று ,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஆற்றல் எத்தகையன ? என்பதையும் கண்டறிய வேண்டி எங்கெல்லாமோ சென்று அலைந்து இறுதியில் திருலோக்கி வந்தடைந்தார். இங்கு ஸ்ரீ புரஹடவாக்கினி என்னும் யோக முறையை கைக் கொண்டு திரிந்து அலைந்த நிலைமையை மாற்றி அமர்ந்து யோகம் செய்யத் தொடங்கியதே இத்தலத்தில் தான். ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்தது இத்தலம். என்றும் திருமாலுடன் திருமகள் உறைகின்ற தலமென்றும் உணர்ந்த நிலையில் சித்தருடைய பூத உடல் மறைந்து அவர் ஜோதி மயமானதாகப் புராணம் கூறுகின்றது.

திருமகள் எக்கணமும் திருமாலை விட்டுப் பிரியாத வரம் பெறல் வேண்டி ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடமிருந்துதிரைலோக்கிய தலம் பற்றிய மஹிமையை உணர்ந்தும் திருமால் தான் திருபாற்கடலில் வீற்றிருப்பது போல எந்தத் திருத்தலத்தில் க்ஷீராப்தி ஸயன நாராயண பெருமாளாகத் தோற்றமளிக்கின்றேனோ அவ்விடத்தில் என் நெஞ்சில் நீங்காத இடம் பெறுவாய் எனப் பணித்ததன் வாயிலாகவும், லக்ஷ்மி தீர்த்தக் கரையில் வில்வ மரத்தினடியில் திருமகள் தவம் புரியத் தொடங்கினாள். என்றும், மேற்கண்ட தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற ரிஷபாரூடர் ஆன அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேசப் பெருமான் திருவருள் பெற்று ஸ்ரீலக்ஷ்மி தேவி க்ஷீராப்தி ஸயன நாராயணப் பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றார் என்றும் தல வரலாறு கூறுகிறது.

பூஜா பலன்கள்

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் திருலோக்கியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ க்ஷீராப்தி ஸயண நாராயணப் பெருமாளை தரிசிப்போருக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பித்ருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள் லக்ஷ்மி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்தால் சாப விமோசனம் பெறுவர். ஸந்ததி விருத்தியாகும்.

திருமகள், திருமாலின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருப்பதால் சொத்து, சுகம் இழந்தோர் மீளப் பெறுவர். உறக்கமின்மையும் , தீய கனவுகளும் அடி பிரதட்சணம் செய்வதன் மூலம் நீங்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். பால் தானம் செய்து வழிபடும் தாய்மார்களுக்கு தாய்ப் பால் நிறைய சுரந்து சந்ததிகள் நல் வளர்ச்சி பெறுவர்.
பிரிந்து வாழும் தம்பதியர் தொடர்ந்து வழிபாடு நடத்தினால் மனம் மாறி இணைந்து வாழ்ந்து மனச் சாந்தி பெறுவர். திருமணமான மங்கையருக்கு மாங்கல்ய தோஷம் நீங்கி சுமங்கலித்துவமும் மகப்பேறும் கிட்டும்.

தெற்கு முக விஷ்ணு துர்க்கையை வழிபடுவோருக்கு தொழிலில் முன்னேற்றமும். காரிய சித்தியும் ஏற்படும்.

ஆஞ்சனேயரை தரிசித்தல் :

புதிய துணியில் மட்டை தேங்காயை தட்சணையுடன் கட்டி ஸ்ரீ ஆஞ்சனேயரின் திருவடிகளில் சமர்பித்துவிட்டால் நினைத்த காரியம் கைகூடும். பிரார்த்தணை நிறைவேறிய பின்னர் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அபிஷேக ஆராதனை செய்து மூட்டையை பிரித்து புத்தாடையை அவருக்கு அணிவித்து சக்கரைப் பொங்கல் ,வடைமாலை போட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

ஓம் நமோ நாராயணாய :

Sunday, March 21, 2010

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேசுவரர் திருக்கோவில், திருலோகி

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேசுவரர் திருக்கோவில், திருலோகி.

அமைவிடம்
தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் காவிரியின் கிளை நதியான பழவாற்றின் வடகரையில் திருப்பனந்தாள், கஞ்சனூர், திருக்கோடிக்காவல் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய ஊர்களின் மையத்தில் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் 8கிமீ சென்று இவ்வூரை அடையலாம். கும்பகோணம் – பூம்புகார் சாலையில் கோட்டூர் என்று வழங்கும் 'துகிலி' ஊரையடைந்து, அதைத் தாண்டி, "திருலோக்கி 5 கி. என்று வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் (இடதுபுறம்) திரும்பிச் சென்றால் கீழசூரியமூலை, வழியாகவும் இவ்வூரையடையலாம். இவ்விரு ஊர்களின் நிலைமையை திருப்பனந்தாளிலோ அல்லது ஆடுதுறையிலோ விசாரித்துக்கொண்டு, பிறகு உரிய பாதையில் செல்வது நல்லது.

திரைலோக்கிய சுந்தரம் - (திருலோக்கி)
இறைவர் திருப்பெயர் : சுந்தரேஸ்வரர், சுந்தரம்

இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி.

தல மரம் : சரக்கொன்றை.
தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்.

வழிபட்டோர் : பிருகுமுனிவர், தேவகுரு முதலியோர்.

திருவிசைப்பா பாடல்கள் : கருவூர்த்தேவர் - திருவிசைப்பா.

தல வரலாறு
• ஏறத்தாழ சுமார் 5000 ஆண்டு பழமையான இத்திருத்தலம் சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக விளங்கி சோழர்கள் மற்றும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தினரால் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
• திரைலோக்கிய மாதேவி என்பவள் முதலாம் இராசராசனின் மனைவியர்களுள் ஒருத்தியாவாள்; சுவாமி பெயர் சுந்தரேசுவரர்; இவையிரண்டும் சேர்ந்து இத்தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் என்று பெயர் வழங்கியது போலும்.
• முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் 'திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
• கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
• திருமகள் திருமால் மனதில் இடம் பெற வேண்டி தீர்த்தம் உருவாக்கி பெருமாள் மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரரையும் வணங்கி திருமார்பில் இடம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறு தவம் புரியும் வேளையில் திருமகளின் நாளங்களானது வில்வ விருட்சமாக (ஸ்ரீ பத்ரம்) உருவாகி இத்திருத்தலத்தில் சைவ வைணவ ஆராதனைக்குரியதாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவில் அமைப்பு
• கோயிலின் உள்ளே நுழைந்ததும் கருவறையில் இறைவனும் இறைவியும் கிழக்கு திசை நோக்கி அருள் பாலிக்க, மகா மண்டபத்தில் ரிஷபாரூடர் வடக்கு திசை நோக்கி தரிசனம் தருகிறார். உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர் திருமேனிகள் உள்ளன. சண்டிகேசுவரர் திருமேனியும் தனித்து உள்ளது.

வடக்கு புற கோட்டத்தில் பிரம்மா, துர்க்கையும் கிழக்கே, பைரவரும் பிச்சாடனரும் அமர்ந்துள்ளனர். இக்கோயிலில் காலை, சாயரட்சை என இரண்டு கால பூஜை மட்டுமே நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தின் தல விருட்சம் "கொன்றை'.

இந்த ஆலயத்தில், இறைவன் சுந்தரேசுவரர் அன்னை அகிலாண்டேசுவரியை அணைத்தபடி நந்தியின் மீது கம்பீர கோலத்தில் வீற்றிருக்கிறார். இருவரையும் எதிரே நின்றபடி குருபகவான் வணங்கிக் கொண்டிருக்கிறார். குரு பகவானின் இந்த அற்புதக் கோலம் வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.


• தம்பதி சமேதராய் நந்தி வாகனத்தில் காட்சி தரும் ரிஷபாரூடரான சிவபெருமானையும் உமாதேவியையும், ரதி மன்மதனை ரட்சிக்கும் பொருட்டு இவர்களை வணங்கும் குருபகவானையும் வணங்குவதால் பாவங்கள் கரைந்து வளமான வாழ்க்கை அமையும். தவிர தம்பதிகளிடையே நிலவும் மனக் கசப்பு அகன்று, பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ரிஷபாரூடராக சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி:

ரதி மன்மதன்:





சிறப்புக்கள்
• இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
• இவர் (கருவூர்த் தேவர்) பாடியுள்ள இத்தலத்து திருவிசைப்பா பதிகத்தில் முதலிரு பாடல்கள் தலைகூற்றாகவும் ஏனையவை தோழி தலைவனிடம் கூறும் கூற்றாகவும் அமைந்துள்ளன.
• ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
• இவ்வூரில் (1) சுந்தரேஸ்வரர் கோயில் (2) கயிலாயநாதர் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன. இவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது.
• கோட்டூர் என்னும் திருமுறைப்பாடல் பெற்ற தலம் இதுவன்று, அதுவேறு. கோட்டீர் என்னும் இச்சிறிய கிராமமும் திலோக்கிய சுந்தரமும் முதல் இராசராசன் காலத்தில் ஒன்றாக இருந்தது போலும்.
• ஆவுடையாரில் சற்றே குட்டையான பாணவடிவில் சுந்தரேஸ்வரர் தரிசனம் தருகிறார்.
• மூலவருக்கு முன் உள்ள மண்டபத்தில் வலப்பால் ஆலிங்கன மூர்த்தி சிலாரூபத்தில் அருமையாகக் காட்சியளிக்கிறார். தோள்மேல் கைபோட்டு அம்பாளை அணைத்திருக்கும் லாவகமே தனியழகு.
• ஆலிங்கனமூர்த்திக்கு நேர் எதிரில் - ரிஷபத்தின் மீது (ரிஷபாரூடராக) சுவாமியும் அம்பாளும் வீற்றிருக்கும் அற்புதமான சிலாரூபம் - ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அதிசய அமைப்பு உடையதாகக் காட்சியளிக்கிறது. பின்புறத்தில் லிங்க வடிவமும் செதுக்கப்பட்டு உள்ளது.
• முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் 'திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
• கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
• திருமகள் திருமால் மனதில் இடம் பெற வேண்டி தீர்த்தம் உருவாக்கி பெருமாள் மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரரையும் வணங்கி திருமார்பில் இடம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறு தவம் புரியும் வேளையில் திருமகளின் நாளங்களானது வில்வ விருட்சமாக (ஸ்ரீ பத்ரம்) உருவாகி இத்திருத்தலத்தில் சைவ வைணவ ஆராதனைக்குரியதாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.


திருலோகி என்ற தலம். வளமான வாழ்க்கை அமையவும், கைநிறைய சம்பாதிக்கவும் பிரிந்த தம்பதியரை இணைக்கும் குருவின் அருள் வேண்டும் ஆலயமாகவும் விளங்குகிறது . குருவின் அருளைப் பெற குரு பகவானை வழிபடுவதோடு அவர் சென்று வழிபட்ட கோயில்களுக்குச் சென்று அங்கு அருள்பாலிக்கும் இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது. இப்படி குருபகவான் வழிபட்ட தலம்தான் திருலோகி.

அவ்வாறான இத்தலமானது இன்று சிதிலமடைந்து வருகின்றது என்பது வேதனைக்குரிய விஷயமாகும், சிறு கிராமத்தில் அமைந்துள்ளதால், மக்களின் பொருளாதார நிலையும் கும்பாபிஷேகம் செய்ய பெறும் நன்னாளை எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது. எனவே இன்று சேர்க்கும் பணத்தை விட நாம் அனுபவிக்கவிருக்கும் நற்பயனை எண்ணி திருக்கோவில் திருத்தொண்டானது அளவில் சிறிதோ பெரிதோ ஆனால் அவை அளிக்கவிருக்கும் புண்ணியங்கள் நமக்கும் மட்டும் இன்றி நம் பிற்கால சந்ததியினருக்கான உண்மையான சொத்தாக பேருதவி புரியும் என்பது திண்ணம் எனக் கொண்டு நல்லுள்ளம் படைத்த பக்தர்களின் நல்வரவை நாடி அவர்களுக்கு அருள்பாலிக்க காத்து கொண்டிருக்கின்றது இத்திருத்தலம்.